ஸ்பெயின் நாட்டின் ஆளுகைக்குட்பட்ட வட ஆப்பிரிக்க நிலப்பரப்பான செவுடாவில் (Ceuta) உள்ள ‘டிரம்போலின்’ (Trampolin Beach) கடற்கரையில், கரைக்கு அருகே வந்த குட்டி டால்ஃபின் ஒன்றை ஒரு கும்பல் கழியால் அடித்துக் கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரைக்கு மிக அருகே நீந்தி வந்த பாட்டில்நோஸ் (Bottlenose) ரகக் குட்டி டால்ஃபினை, அங்கிருந்த சிலர் வலுகட்டாயமாகத் தண்ணீரை விட்டு வெளியே இழுத்து வந்து இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த காட்சிகளில், உயிருடன் இருந்த குட்டி டால்ஃபினைத் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு வெற்றியின் சின்னமாகப் பறைசாற்றுவது போலக் அக்கும்பல் கடற்கரையில் வலம் வந்துள்ளது. பின்னர், அக்கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மரக்கழியால் அக்குட்டி டால்ஃபினின் மண்டையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அலறித் துடித்து அவர்களைத் தடுத்து, டால்ஃபினைக் மீட்டு மீண்டும் கடலில் விட்ட போதிலும், தலையில் பலத்த காயம் அடைந்த அந்த டால்ஃபின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டப்படி டால்ஃபின்கள் மிகக் கடுமையாகப் பாதுகாக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பாதுகாக்கப்பட்ட உயிரினத்தைச் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொன்ற குற்றத்திற்காக, இதில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ‘Change.org’ தளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டு இணையவழிக் கோரிக்கை மனுவைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், ‘டாப்மா’ (DAUBMA) என்ற சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் ஸ்பெயின் காவல்துறையினரிடம் (Guardia Civil) முறைப்படி குற்றவியல் புகார் அளித்துள்ளது. ஆப்பிரிக்கக் குடியேறிகள் விவகாரம் தொடர்பாகச் செவுடா பகுதியில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், இந்த மனிதநேயமற்ற விலங்கு வதைச் சம்பவம் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.