Posted in

சட்டமன்றத்தில் போட்டது ஏஐ கண்ணாடியா? – எழுந்த சர்ச்சைக்குத் தவெக அமைச்சர் பர்வேஸ் அதிரடி விளக்கம்!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தவெக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சட்டமன்றத்திற்குள் கேமரா வசதி கொண்ட மெட்டா ஏஐ (Meta AI) ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து வந்ததாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளான நிலையில், இச்சரச்சைகளுக்குப் பதில் அளித்து அமைச்சர் பர்வேஸ் செய்தியாளர்களிடம் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் பர்வேஸ் அடர் நிற மூக்குக்கண்ணாடி அணிந்து பேரவைக்கு வந்திருந்தார். அது வழக்கமான கண்ணாடி அல்ல என்றும், அவையின் ரகசியங்களைப் படம் பிடிக்கும் வகையில் ஏஐ கேமரா பொருத்தப்பட்ட மெட்டா ஸ்மார்ட் கண்ணாடி என்றும் இணையத்தில் தகவல்கள் பரவின. சட்டமன்றத்திற்குள் கேமராக்கள் மற்றும் மின்னணுப் பதிவுக் கருவிகளைக் கொண்டு வர அனுமதி இல்லாத நிலையில், அமைச்சரின் இச்செயல் பேரவை விதிகளுக்கு எதிரானது என மாற்றுக்கட்சித் தலைவர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இச்சரச்சைகளுக்குப் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் பர்வேஸ், “எனக்குச் சிறுவயதிலிருந்தே கண் பார்வை குறைபாடு (Power Issue) உள்ளது; கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாகக் கடுமையான தலைவலி ஏற்பட்டதால் பிரபல கண் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தேன். அப்போது மருத்துவர் பரிந்துரைத்த வழக்கமான பவர் கண்ணாடியையே நான் அணிந்து வந்தேன். அதில் எந்தவிதமான கேமராவோ அல்லது ஏஐ தொழில்நுட்பமோ இல்லை” எனத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாகப் (Live Stream) ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், நான் எதற்காக ஏஐ கண்ணாடியைப் பயன்படுத்தப் போகிறேன்? தவெக அரசின் மீதும் என் மீதும் வீண் பழியைச் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிலர் இத்தகைய பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மக்கள் உண்மையை அறிவார்கள், இத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனக் கூறிச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.