கிழக்கு சீனப் பகுதியில் ‘சௌடேல்’ (Saudel) புயல் காரணமாகக் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால், ஜியாங்சி (Jiangxi) மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கர நிலச்சரிவு மற்றும் சேற்றுப் பெருக்கு ஏற்பட்டது. சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த கொடூர இயற்கை பேரிடரில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 11 பேரை காணவில்லை என சீன ஊடகங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
ஜியாங்சி மாகாணத்தின் சுய்சுவான் (Suichuan) மாவட்டத்தில் அமைந்துள்ள காவோபிங் (Gaoping) நகரில் விடியற்காலை 4 மணியளவில் இந்த பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மணல், பாறைகள் மற்றும் சேற்றுடன் சீறிப் பாய்ந்து வந்த வெள்ளம், கிராமத்தில் இருந்த 12 வீடுகளை முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கியது. இதில் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கிராம மக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவ வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பேரிடர் மேலாண்மை மையம் உறுதி செய்துள்ளது. சேற்றில் புதையுண்ட 11 பேரைக் கண்டுபிடிக்க மோப்ப நாய் மற்றும் ‘ட்ரோன்’ அதிநவீன கருவிகள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் கடலோர மாகாணங்களான புஜியான் மற்றும் சேஜியாங் பகுதிகளில் சௌடேல் புயல் அடுத்தடுத்து மூன்று முறை கரையை கடந்ததால், வரலாறு காணாத அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.