சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் பணிகளுக்காகத் தமிழக அரசு ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. முன்னதாக ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டதாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தற்போது ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கப்பட்ட விவரம் வெளியாகி இருப்பது அரசியல் களத்தில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தற்போதுள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை முதன்மை வளாகத்தில் இயங்கி வரும் முதலமைச்சர் அலுவலகம், இடநெருக்கடி மற்றும் போதிய வசதிகள் இன்மையால், அதே வளாகத்தில் உள்ள 10 மாடி கட்டடமான நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. கடல் பார்த்த அதிநவீன வசதிகளுடன் (Sea-facing office) கட்டப்பட்டு வரும் இந்தப் புதிய அலுவலகத்தின் உள்கட்டமைப்பு, நவீனப் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காகப் பொதுப்பணித் துறை சார்பில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, “முதலமைச்சர் அலுவலக இடமாற்ற டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளன; பணிகள் தொடங்கிய பிறகே டெண்டர் அறிவிப்பு ஆன்லைனில் வெளியிடப்பட்டது” என எதிர்க்கட்சியான திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இதற்குப் பதிலளித்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “முதலமைச்சரைச் சந்திக்க வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குப் போதிய வசதிகள் இல்லாததால், அனைவருக்கும் வசதியான பணிச்சூழலை உருவாக்கவே இந்தத் தற்காலிக இடமாற்றம் செய்யப்படுகிறது” எனக் காரசாரமாக விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆர்டிஐ மூலம் பெறப்பட்டத் தரவுகளில் ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கான அரசாணை விவரங்கள் வெளிவந்துள்ளதால், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் பாஜக ஆகியவை தவெக அரசின் நிவாஹ வெளிப்படைத்தன்மை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன. 100 நாட்களைக் கடந்துள்ள தவெக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஊழல் மற்றும் டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுகளை முதன்மை ஆயுதமாகக் கையிலெடுத்துள்ள சூழலில், இந்த புதிய நிதி ஒதுக்கீடு தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.