Posted in

பாகிஸ்தானைப் பிரிக்கப் போகிறாரா ஆசிம் முனிர்? லண்டன் சந்திப்பு, நக்வியின் வாக்கெடுப்பு திட்டத்தால் அரசியல் புயல்!

பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய 4 மாநிலங்களைப் பிரித்து, 15 புதிய நிர்வாகப் பிராந்தியங்களை உருவாக்கும் ரகசியத் திட்டத்தை அந்நாட்டு ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனிர் முடுக்கிவிட்டுள்ள செய்தி சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான ராணுவத்தின் செய்தியுடன் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி லண்டனுக்குச் சென்று, அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரியைச் சந்தத்துப் பேசியுள்ள சம்பவம் பாகிஸ்தான் ஆளும் கூட்டணியையே நிலைகுலைய வைத்துள்ளது.

பாகிஸ்தானில் தற்போதைய ஜனநாயக ஆட்சியில் நிர்வாக அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள உள்துறை அமைச்சர் மோசின் நக்வி, புதிய மாநிலங்களை உருவாக்குவது குறித்து மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும் எனத் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாகச் செயல்படும் நக்வியின் இந்த எச்சரிக்கை, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் அதிபர் ஜர்தாரி தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, மறைமுக ராணுவக் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கான முதற்கட்ட முயற்சி என அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

லண்டனில் தங்கியுள்ள பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியைச் சந்தித்த நக்வி, 90 நிமிடங்கள் நீடித்த ரகசியப் பேச்சுவார்த்தையின் போது ராணுவத்தின் புதிய மாநிலக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களை உடைத்துச் சிறிய நிர்வாக மண்டலங்களாகப் பிரிப்பதன் மூலம், 18-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசு மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே ஆசிம் முனீரின் முக்கியத் திட்டம் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், சிந்து மாகாணத்தைப் பிரிக்க ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (PPP), பஞ்சாபைப் பிரிக்க நவாஸ் ஷெரீப்பின் லீக் கட்சியும் (PML-N) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 28-வது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்து, ராணுவத் தளபதி ஆசிம் முனீரை அதிபராக அமர்த்தும் மறைமுக சதித்திட்டம் இதன்பின்னால் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதால், பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கவிழ்ந்து ராணுவ ஆட்சி மலருமோ என்ற பீதி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.