தென்னாப்பிரிக்காவில் சிறுவர்களை ஆண்களாக மாற்றும் ‘உல்வாலுகோ’ (Ulwaluko) என்ற பழங்குடியினரின் பாரம்பரிய ஆச்சாரச் சடங்கின் போது, தகுதியற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான சுன்னத் (Circumcision) அறுவை சிகிச்சைகளால் 43 சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக இயங்கும் பழங்குடிப் பயிற்சி முகாம்களில் இந்த மனித உரிமை மீறல்கள் அரங்கேறியுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்காவில் உள்ள கோசா (Xhosa) உள்ளிட்ட பழங்குடியின சமூகங்களில், 11 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களைக் காட்டுப் பகுதியில் உள்ள ரகசிய முகாம்களுக்கு அழைத்துச் சென்று சில வாரங்கள் தங்க வைத்து ஆண்மைப் பயிற்சிகள் அளிப்பது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். இந்தப் பயிற்சியின் இறுதி கட்டமாகச் சிறுவர்களுக்குச் சுன்னத் செய்யப்படுகிறது. ஆனால், அரசின் அனுமதி பெறாத சட்டவிரோத முகாம்களில், கத்தரிக்கோல், பழைய ஈட்டிகள் மற்றும் பிளேடுகளைப் பயன்படுத்தி எவ்வித மரத்துப்போகும் மருந்துகளும் (Anesthetic) இன்றி இந்த அறுவை சிகிச்சைகள் கொடூரமாகச் செய்யப்படுகின்றன.
சுன்னத் செய்யப்பட்ட பிறகு காயங்கள் விரைவாகக் ஆற வேண்டும் என்ற மூடநம்பிக்கையால் சிறுவர்களுக்குத் தண்ணீர் குடிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கடுமையான நீரிழப்பு (Dehydration), காயங்களில் ஏற்படும் நச்சுத் தொற்று (Sepsis) மற்றும் தசை அழுகல் (Gangrene) காரணமாகச் சிறுவர்கள் அலறித் துடித்துப் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். மேலும், அறுவை சிகிச்சை தவறாகச் செய்யப்பட்டு படுகாயமடைந்த 75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு உறுப்புகள் துண்டிக்கப்படும் அவலம் நேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத முகாம்களை நடத்தி வந்த 41 பேரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்கப் பாரம்பரிய விவகாரங்கள் துறை அமைச்சர் வேலென்கோசினி ஹ்லாபிசா (Velenkosini Hlabisa), சட்டவிரோத முகாம்களை நடத்துவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பாரம்பரியத்தின் பெயரால் பிஞ்சுச் சிறுவர்களின் உயிரைப் பறிக்கும் இந்த கொடூரக் கலாச்சாரத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் சர்வதேச அளவில் குரல் எழுப்பி வருகின்றனர்.