Posted in

சென்னையில் நடந்த அடுத்தடுத்த கொடூரங்களால் வெகுண்டெழுந்த எம்பி கனிமொழி!

தலைநகர் சென்னையின் பரபரப்பான பெசண்ட் நகர் பகுதியில் தவெக பிரமுகர் ஒருவர் வீதியில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறை முற்றிலும் செயலிழந்து விட்டதற்கும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கும் இந்தத் தொடர் படுகொலைகளே சாட்சி” என அவர் ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியும் அண்மையில் தவெகவில் இணைந்தவருமான கண்ணன் என்பவர் ஆயுதம் தாங்கிய கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்த்து வட மாநிலக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் போதை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வையும் சுட்டிக்காட்டியுள்ள கனிமொழி எம்பி, “பொதுமக்கள் அச்சமின்றி நடமாட முடியாத சூழல் நிலவுகிறது; இது தலைநகரமா அல்லது கொலைநகரமா என்று எண்ணும் அளவிற்கு அதிர்ச்சியளிக்கும் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சட்டமன்றத்தில் திங்கள்கிழமை அன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குத் தமிழக முதல்வரும் தவெக தலைவருமான சி.ஜோசப் விஜய் பதிலுரை அளிக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவிலேயே தலைநகரில் இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது. ஏற்கனவே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை பெருநகரப் பகுதிகளிலும் அடுத்தடுத்து நடைபெறும் குற்றச் சம்பவங்களைக் சுட்டிக்காட்டி தவெக அரசின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை திமுக முற்றுகையிட்டு வருகிறது.

தலைநகரில் அரங்கேறிய இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவைக்கு வெளியேயும் இணையதளங்களிலும் கடும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்தக் காரசாரமான ‘கொலைநகரம்’ விமர்சனங்களுக்கும், கனிமொழி எம்பியின் கேள்விகளுக்கும் செப்டம்பர் 7 பேரவை பதிலுரையில் முதலமைச்சர் விஜய் என்ன மாதிரியான பதிலடி கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.