“இன்றைய சூழலில் நான் இந்த இடத்தில் இருப்பதற்கு நமது வீட்டுப் பெண்களே மிக முக்கியமான காரணம்; எனவே எந்தப் பெண்ணையாவது ஆபாசமாகவோ, அவதூறாகவோ பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்” எனத் தமிழகச் சட்டப்பேரவையில் ஆவேசத்தின் உச்சத்திற்கே சென்று உரையாற்றியுள்ளார் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய். “கடந்த காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் இந்த எதிர்க்கட்சியினரால் எவ்வளவு அவமானங்களைச் சந்தித்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்” என்றும் அவர் பேரவையில் காட்டமாகக் சுட்டிக்காட்டினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய முதல்வர் விஜய், அரசியல் ரீதியான காரசாரமான விமர்சனங்களை ஏற்பதில் தவறில்லை எனக் குறிப்பிட்டார். “எலும்பை உடைப்பேன் என்றெல்லாம் அவையில் பேசுவதுதான் அரசியலா? இதைப் பார்த்து பார்த்துதான் மக்கள் உங்களை அந்தப் பக்கத்தில் உட்கார வைத்துள்ளார்கள்” எனச் சாடிய அவர், “தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவு வராது என திமுக மூத்த உறுப்பினர் ஒருவர் பேசியது மக்கள் தீர்ப்பை மதிக்காத மனநிலையைக் காட்டுகிறது” என்றும் ஆவேசப்பட்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “ஆபாசப் பேச்சையும் அவதூறு அரசியலையும் ‘நாங்கள் அந்த காலத்தில் பேசாத பேச்சா’ என மூத்த தலைவர்கள் நியாயப்படுத்துவது கொடூரமானது; தேய்ந்துபோன அந்த அவதூறு அரசியலைக் கைவிட்டு, குறைந்தபட்ச அரசியல் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் (Political decency & decorum) பேண வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், திமுகவினர் எதற்கெடுத்தாலும் ‘மிசாவைப் பார்த்தவர்கள்’ எனக் கூறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மிசா வரலாறு அனைவருக்கும் தெரியும் என்றார்.
இறுதியாக, கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற வரிகளை மேற்கோள் காட்டி திமுகவைக் சாடிய முதல்வர், “‘பேசிப் பழகிய பை… வாங்கிப் பழகிய கை… போட்டுப் பழகிய பை…’ – இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக!” எனக் குறிப்பிட்டார். “தமிழ்நாடுதான் என் வீடு, 8 கோடி தமிழ் மக்களும்தான் என் சொந்தங்கள்; இந்த அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இல்லாமல், 8 கோடி மக்களின் அடையாளமாகவே திகழும்” எனத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.
`