Posted in

திமுகவின் ஊழல் பட்டியலை அவிழ்த்த முதல்வர் விஜய்: இவ்வளவு ஊழலா?

“திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்தும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ‘அறிவியல் பூர்வமான ஊழல்கள்’ (Scientific Corruption)” எனத் தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அடுக்கடுக்கான ஆதாரங்களைக் காட்டிப் புயலைக் கிளப்பியுள்ளார். “திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும்; தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்” என்றும் அவர் பேரவையில் காட்டமாகச் சாடினார்.

காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தயார் செய்யப்பட்ட உரையைத் தாண்டிப் பேசத் தொடங்கிய முதலமைச்சர் விஜய், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை (ED) திரட்டிய கோப்புகளையும், 1970-களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்காரிய கமிஷன் அறிக்கையையும் அவையில் சுட்டிக்காட்டினார். “வீராணம் குடிநீர்த் திட்டத்தில் கமிஷன் பெறுவதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகச் சர்காரிய கமிஷன் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; மிசா தியாகம் எனக் கூறிக்கொள்ளும் திமுகவின் ஊழல் வரலாறு இதுதான்” என அவர் சாடினார்.

தொடர்ந்து அமலாக்கத்துறையின் அறிக்கைகளை வாசித்துக் காட்டிய முதல்வர், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். “டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடமிருந்து 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சட்டவிரோதமாகப் வசூலிக்கப்பட்ட ‘பார்ட்டி ஃபண்ட்’ நேரடியாக அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்குத் தான் சென்றடைந்ததாக அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டியது அவையில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

மேலும் ‘கரூர் கேங்’ மற்றும் ரத்தீஸ் விவகாரத்தைக் குறிப்பிட்ட முதல்வர் விஜய், தவெக அரசு பதவியேற்றதும் ரத்தீஸ் ஏன் துபாய்க்குத் தப்பிச் சென்று பதுங்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். இரு துறைகளின் கோப்புகளை ஆய்வு செய்ததற்கே இவ்வளவு பெரிய ஊழல் வெளிவந்துள்ள நிலையில், அனைத்துத் துறைகளையும் பரிசீலித்தால் என்னென்ன உண்மைகள் வெளிவரும் என அவர் வினவினார். முதலமைச்சரின் இந்த அதிரடியான குற்றச்சாட்டுகளால் நிலைகுலைந்த திமுக உறுப்பினர்கள், சபாநாயகர் பீடத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டுப் பின்னர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.