“ஜனநாயகத்துக்காகப் போராடிச் சிறைச்சென்ற மிசா தியாகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் அரசியலுக்கு வந்ததே ஒரு தற்செயலான விபத்து தான்” என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவையில் சினிமா சூட்டிங் டயலாக் பேசுவது போலத் தான் முதலமைச்சர் விஜய் பேசிக் கொண்டிருந்தார். சபாநாயகரும் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுத் தமிழக வெற்றி கழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தார்” என சாடினார்.
மேலும், தவெக அரசு மீதான ஊழல் புகார்களை அடுக்கிக் கூறிய உதயநிதி, “முதலமைச்சர் விஜய்யின் நண்பர்கள், அவருடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி மற்றும் உறவினர்கள் கையில் தான் மாநிலத்தின் கனிமவளக் கட்டுப்பாடே உள்ளது. ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த வழக்கில் அவகாசம் கேட்டவர் தான் இந்த முதலமைச்சர். லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையை வைத்து எங்களை மிரட்டப் பார்க்கிறார்கள். திமுக மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு வெளிப்படையாகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். “கோடி கோடியாகப் பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாகக் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-வே பேரவையில் தோலுரித்துக் காட்டியுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ரீல்ஸ்க்காக மட்டுமே பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்” என உதயநிதி ஸ்டாலின் சாடினார்.