Posted in

சீனாவை உலுக்கும் ‘சௌடெல்’ புயல் – நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி: 9 பேரைக் காணவில்லை எனத் தகவல்!

‘சௌடெல்’ (Saudel) சூறாவளி புயல் காரணமாகக் கிழக்குச் சீனப் பிராந்தியங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 9 பேரைக் கண்டுபிடிக்கும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சீனாவின் ஜியாங்சி (Jiangxi) மாகாணத்தில் உள்ள சுய்சுவான் (Suichuan) பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த கொடூர நிலச்சரிவு, மிங்கெங் என்ற கிராமத்திலிருந்த 12-க்கும் மேற்பட்ட வீடுகளை முற்றிலுமாக சேதப்படுத்தி புதைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்ணில் புதைந்த இடிபாடுகளிலிருந்து இருவரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அண்டை மாகாணமான ஹுனானிலும் புயல் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு மேலும் இருவர் பலியாகியுள்ளனர். ஜியாங்சி மாகாணத்தில் மட்டும் சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடைத்தங்க முகாம்களுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஜெஜியாங் மற்றும் ஃபூஜியான் மாகாணங்களில் அடுத்தடுத்து கரையைக்கடந்த ‘சௌடெல்’ புயல், நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஃபூஜியான் மாகாணத்தில் வெள்ளப் அபாயம் காரணமாக சுமார் 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் ராணுவ உதவியுடன் முடுக்கி விடப்பட்டுள்ளன.