தமிழ்நாடு அரசின் பொதுத் துறை சார்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் விதவை மனைவிகளுக்கான மாதாந்திர நிதி உதவித் தொகையை ரூ.4,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டிற்காகச் சேவையாற்றிய முன்னாள் படைவீரர்களின் நல்வாழ்வையும், அவர்களின் குடும்பப் பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதி உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ள செய்தி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்புவோர், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவோ அல்லது மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகங்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்குப் படைவீரர் அடையாள அட்டை (Ex-servicemen Identity Card), கணவரின் இறப்புச் சான்றிதழ் (விதவைகளுக்கு), ஆதார் கார்டு, குடும்ப அட்டை (Ration Card), மற்றும் வங்கியின் கணக்குப் புத்தக நகல் ஆகிய ஆவணங்கள் அவசியமாகும்.
மேலும், பயனாளிகளின் வசதிக்காகத் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் (TEXCO) நிர்வாகப் பணிகளை எளிமையாக்கும் வகையில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த வலைத்தளச் செயலியும் உருவாக்கப்பட உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிதியுதவி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.