Posted in

த்ரிஷாவின் தங்க மனசைப் பாராட்டி உருகிய மாளவிகா மோகனன்!

கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகை மாளவிகா மோகனன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் எளிமையான பண்பையும், பெருந்தன்மையான குணத்தையும் பாராட்டிப் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான போது, வாரணாசி படப்பிடிப்பில் தான் முற்றிலும் புதியவளாக இருந்ததாக மாளவிகா குறிப்பிட்டார். 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் த்ரிஷா, படப்பிடிப்பு இடைவேளையில் புதுமுகமான என்னிடம் மிகவும் இயல்பாகவும் நட்பாகவும் பழகினார். ஹோட்டலில் தங்கியிருந்த போது வெளியே செல்லும் போதெல்லாம் தன்னையும் உடன் அழைத்துச் சென்று சௌகரியமாக உணர வைத்தார் என மாளவிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், ‘பேட்ட’ படப்பிடிப்பு முடிந்த சில மாதங்களில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான போது, த்ரிஷா தனக்குத் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்தியதாகக் கூறினார். “ஹே பேப், உனக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். இது மிகப்பெரிய வாய்ப்பு, வாழ்த்துகள்” எனத் த்ரிஷா மெசேஜ் அனுப்பியதாகக் கூறிய மாளவிகா, திரையுலகில் சக நடிகையை மனதார வாழ்த்துவதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும் எனப் புகழாரம் சூட்டினார்.

திரையுலகில் மூத்த நடிகர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளேயே ஒதுங்கியிருக்கும் சூழலில், த்ரிஷாவின் இந்த அன்பான மற்றும் உண்மையான அணுகுமுறை மிகவும் அரிதானது என மாளவிகா பேசியுள்ளார். மாளவிகாவின் இந்த நேர்காணலைத் தொடர்ந்து, “தலைவி த்ரிஷாவுக்கு எப்போதுமே பொய்யாகப் பேசிப் பழகத் தெரியாது, அவர் தங்கமான குணம் கொண்டவர்” எனத் த்ரிஷாவின் ரசிகர்கள் இணையத்தில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.