Posted in

ஹோர்முஸ் நீரிணையில் 4 மாத ரகசிய ஆபரேஷன்! – ஈரான் கண்ணிவெடிகளை அகற்றிய அமெரிக்க நேவி சீல்ஸ்

சர்வதேச எரிபொருள் வர்த்தகத்தின் உயிர்நாடியாகத் திகழும் ஹொர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), ஈரான் ராணுவத்தால் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிமருந்து கண்ணிவெடிகளைத் தகர்த்து அழிப்பதற்காக அமெரிக்க கடற்படையின் ‘நேவி சீல்ஸ்’ (Navy SEALs) சிறப்புப் படையினர் கடந்த 4 மாதங்களாக அதிரடி ரகசிய ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தியுள்ள உண்மை வெளிவந்துள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் உச்சத்திலிருந்த வேளையில், சர்வதேச மற்றும் ஓமன் கடல் எல்லைகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஆபத்தான கடல் கண்ணிவெடிகளை ஈரான் வீசியதாக சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மதிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக எண்ணெய் டேங்கர்கள் மற்றும் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய சூழலில், சர்வதேசக் கடல் பாதையை மீட்டெடுக்க அமெரிக்கப் படைகள் ‘பைனான்சியல் டைம்ஸ்’ அறிக்கையின்படி இரகசியமாக இந்த ஆபரேஷனில் இறங்கின.

அமெரிக்க நேவி சீல்ஸ் பிரிவைச் சேர்ந்த சிறப்பு மூழ்காளர்கள் (Navy SEAL Divers), அதிநவீன சோனார் கருவிகள் பொறுத்தப்பட்ட ரோபோடிக் படகுகள் மற்றும் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களைப் பயன்படுத்தி இரவோடு இரவாகக் கடலுக்குள் இறங்கித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆபத்தான இத்தேடுதலின் போது, கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு ஈரானியக் கண்ணிவெடியின் அருகிலும் ஆபத்தைப்பொருட்படுத்தாமல் நேவி சீல் வீரர் நேரடியாகச் சென்று வெடிபொருட்களைப் பொருத்தி அவற்றை நீருக்கடியிலேயே வெடித்துச் சிதறடித்துள்ளனர்.

கடந்த வாரம் சர்வதேசக் கடல் பகுதியில் உள்ள கண்ணிவெடிகள் அனைத்தும் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பென்டகன் முறைப்படி உறுதிப்படுத்தின. இருப்பினும், சிறிய ரகப் படகுகள் மூலம் ஈரான் மீண்டும் இரவோடு இரவாகக் கண்ணிவெடிகளை வீசக்கூடும் என்ற அச்சம் கப்பல் நிறுவனங்களுக்கு நீடிப்பதால், ஹொர்முஸ் நீரிணையில் பதற்றமும் தீவிரக் கண்காணிப்பும் தொடர்ந்து நிலவி வருகிறது.