ஸ்காட்லாந்தின் லோக் லோமண்ட் (Loch Lomond) பகுதியில் அமைந்துள்ள ‘கேமரூன் ஹவுஸ்’ (Cameron House) என்ற சொகுசு விடுதியின் புல்வெளியில், பிரிட்டிஷ் அரச விமானப்படையின் (RAF) பிரம்மாண்ட ‘சினூக்’ (Chinook) ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கி, அங்கிருந்து பைலட்டுகள் கேக் மற்றும் சிற்றுண்டிகளை வாங்கிச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு இரவு தங்குவதற்கு சுமார் 2,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.2.2 லட்சம் வரை) கட்டணம் வசூலிக்கப்படும் அந்த உயர்தர விடுதியில் தங்கியிருந்த விருந்தினர்கள், சுமார் 30 மீட்டர் நீளமுள்ள ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் புல்வெளியில் தரையிறங்கியதைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய விமானப்படைப் பைலட் ஒருவர் நேராக விடுதிக்குள் சென்று, கேக் மற்றும் ஸ்நாக்ஸ் அடங்கிய பையுடன் மீண்டும் வெளியே வந்தார்.
இதுகுறித்துத் தவறான தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து விளக்கமளித்த பிரிட்டிஷ் அரச விமானப்படை, “இது ராணுவ பயிற்சி மற்றும் கேப்டன் மாற்றப் பணிக்காக முன்னரே திட்டமிடப்பட்ட வழக்கமான தரையிறக்கம் தான்” எனத் தெளிவுபடுத்தியது. இருப்பினும், அன்று அந்தப் பைலட்டின் பிறந்தநாள் என்றும், அவர் ராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முந்தைய கடைசிப் பறத்தல் பயணம் என்றும் அறிந்த விடுதி நிர்வாகம், அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் கேக் மற்றும் சிற்றுண்டிகளைப் பரிசாக வழங்கி உபசரித்துள்ளது.
பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்தபோதிலும், பயிற்சிப் பயணத்தின் போது நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான ஓய்வுபெறும் உபசரிப்பு குறித்த உண்மை வெளியானதும், பலரும் சமூக வலைதளங்களில் அந்த பைலட்டிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.