பிரபல யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் நிதி ஆதாயத்திற்காகவும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தன் மீது திட்டமிட்ட அடிப்படையில் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாகக் கூறி, மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஏ. அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ. 1.05 கோடி இழப்பீடு கோரி சிவில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு காவல் பயிற்சி அகாடமியின் இயக்குநராகப் பணியாற்றி வரும் 1998-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஏ. அருண் தாக்கல் செய்துள்ள மனுவில், சவுக்கு சங்கர் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் தன் மீது தொடர்ச்சியாக அவதூறான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தனது வீட்டிலும் தனது மனைவியான வருமான வரித்துறை அதிகாரி பி. யமுனா தேவியின் இல்லத்திலும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாகச் சவுக்கு சங்கர் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அது தனது நேர்மைக்கும் நற்பெயருக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் குறித்த ரகசியமான மற்றும் உண்மையான தகவல்கள் தன்னிடம் இருப்பது போன்ற போலிப் பிம்பத்தைச் சவுக்கு சங்கர் பொதுமக்கள் மத்தியில் உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்ட ஐபிஎஸ் அதிகாரி அருண், இதன் மூலம் அவர் சட்டவிரோத நிதி ஆதாயங்களை அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தொழில்முறைப் பாதிப்புகளுக்கு இழப்பீடாக ரூ. 1,00,05,000 வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து யூடியூப் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு யூடியூப் மற்றும் ‘எக்ஸ்’ (X Corp) நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், வருங்காலத்தில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பச் சவுக்கு சங்கருக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி, இது குறித்துப் பதிலளிக்குமாறு சவுக்கு சங்கர், யூடியூப் மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.