ஐரோப்பிய எல்லைகளைத் துளைத்துக் கொண்டு பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிகளை அழைத்துச் செல்லும் கடத்தல் நெட்வொர்க் ஒன்றை சுங்க மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் படையினர் முறியடித்துள்ளனர். ஆங்கிலக் கால்வாய் வழியாக அதிவேக ஸ்பீட்போட் (Speedboat) மூலம் ‘கடல் டாக்சி’ போன்று செயல்பட்டு வந்த இந்த ரகசியப் பாதையைக் கண்டுபிடித்த அதிகாரிகள், கடத்தல் கும்பலைச் சேர்ந்த 19 வயது பிரிட்டிஷ் வாலிபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவின் எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதக் குடியேறிகள் பிரிட்டனை அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்காகச் சர்வதேசக் மனிதக் கடத்தல் கும்பல்கள் பிரத்யேகச் சங்கிலி அமைப்பை உருவாக்கி, மிகவும் ஆபத்தான முறையில் குறைந்த தரத்திலான படகுகள் மற்றும் அதிவேகப் படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கவைத்து பிரிட்டன் கடலோரப் பகுதிக்கு அவர்களை அழைத்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
தற்போது லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தெற்குப் பகுதிப் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், 19 வயது பிரிட்டிஷ் வாலிபர் ஒருவர் ஸ்பீட்போட்டை இயக்கி, குறுகிய நேரத்தில் சட்டவிரோதக் குடியேறிகளை பிரிட்டன் கரையில் இறக்கிவிடும் பணியைச் செய்து வந்தது அம்பலமானது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிவேகப் படகுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை ஆய்வு செய்த புலனாய்வு அமைப்புகள், இதில் பன்னாட்டு அளவில் பெரிய நெட்வொர்க் இயங்கி வருவதை உறுதி செய்துள்ளன.
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்புச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள போதிலும், இத்தகைய ரகசியப் பாதைகள் (Migrant Highway) மூலம் குடியேறிகளைக் கடத்தும் நவீன உத்திகள் அதிகரித்துவருவது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆங்கிலக் கால்வாய் பகுதியில் கண்காணிப்புப் பணிகளைப் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.