பிரபல ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரான ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ (Peaky Blinders) மற்றும் ‘டவுண்டன் அபே’ (Downton Abbey) உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களின் படப்பிடிப்புத் தளமாகப் பயன்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டால்டன் மில்ஸ்’ (Dalton Mills) நெசவாலை கட்டடத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் கட்டடத்தின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் மாகாணத்தில் உள்ள கீக்லே (Keighley) பகுதியில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான இந்த ஆலை கட்டடத்தில், இரவு 8 மணியளவில் திடீரெனத் தீப்பிடித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர், விடிய விடியப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த டால்டன் ஆலை கட்டடம், ஏற்கனவே 2011, 2022 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்துகளால் உள் பகுதியில் பலத்த சேதமடைந்திருந்தது. இருப்பினும், அதன் பழமையான கட்டடக் கலை அழகு காரணமாக ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ தொடரின் முக்கிய கிடங்கு காட்சிகளுக்கும், டவுண்டன் அபே திரைப்படத்தின் கிளப் காட்சிகளுக்கும் பின்னணியாக இக்கட்டடமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
தொடர்ச்சியாக இக்கட்டடத்தில் தீவிபத்துகள் நிகழ்ந்து வருவதால், இதன் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதிச் செயல்கள் (Arson Attack) ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் மேற்கு யார்க்ஷயர் பொலிஸாரும் தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற சினிமா வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான இந்த ஆலை கட்டடம் மீண்டும் தீக்கிரையான சம்பவம் திரையுலக ரசிகர்களிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.