ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட்டில் (Bucharest) சுமார் 5,055 மீட்டர் (3.1 மைல்) நீளமுள்ள பிரம்மாண்டமான உணவருந்தும் மேஜையை அமைத்து, நாட்டின் முதல் சிறுவர் மனநல மருத்துவமனைக்காக நிதி திரட்டி ‘ப்ளூம் தி வேர்ல்ட் அசோசியேஷன்’ (Bloom The World Association) அமைப்பு புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உனிரை பவுலேவார்டு முதல் நாடாளுமன்ற அரண்மனை சதுக்கம் வரை 5 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு மீள்சுழற்சி செய்யப்பட்ட மரப் பலகைகளைக் கொண்டு இந்த மேஜை வரிசையாக அமைக்கப்பட்டது. ‘இணைக்கும் மேஜை’ (Uniting Table) எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்வில் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தி, கின்னஸ் சாதனையில் பங்கேற்றனர். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான மேஜை என்ற அதிகாரப்பூர்வச் சான்றிதழை கின்னஸ் நடுவர் ஜோன் பிரென்ட் விழாமேடையில் வழங்கினார்.
இந்தக் கின்னஸ் முயற்சி வெறும் சாதனைக்காக மட்டுமின்றி, ருமேனியாவில் அதிகரித்து வரும் சிறுவர் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் உயரிய சமூக நோக்கத்தைக் கொண்டுள்ளது. புகாரெஸ்ட்டில் உள்ள ஒப்ரேஜியா மருத்துவமனை வளாகத்தில் 16.5 மில்லியன் யூரோ செலவில் கட்டப்படவுள்ள புதிய குழந்தைகள் மனநலப் பிரிவிற்கான நிதி சேகரிக்கும் முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் 5,700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடையும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த 5 அடுக்கு மருத்துவமனை கட்டடம் அமையவுள்ளது.
சமூக உணர்வையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுசுழற்சி முறையையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்த சாதனை நிகழ்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்களின் பங்களிப்புடன் கட்டப்படும் இந்த புதிய குழந்தைகள் மனநல மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை அரசு தரப்பில் வழங்குவதாக ருமேனிய சுகாதார அமைச்சகமும் உறுதியளித்துள்ளது.