Posted in

மாஜி எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் – அதிமுகவுக்கு செக் வைக்கும் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்!

அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், இடைத்தேர்தலில் ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ள சம்பவம் அதிமுக தலைமைக்கு மிதமிஞ்சிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அவர் நடத்தி வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தென் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் அங்கீகரித்து காலியிடங்களை அறிவித்த நிலையில், காலியான தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் களமிறங்க மீண்டும் அந்தந்த மாஜிக்களுக்கே சீட் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுயநலத்துடன் செயல்படுகிறார்” என்ற அதிருப்தியில் உள்ள மேலும் பல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைக் கட்சி தாவ வைக்கும் முயற்சியில் சி. விஜயபாஸ்கர் காய் நகர்த்தி வருகிறார். இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் தவெக தலைமை காட்டும் இந்த வேகம், அதிமுகவின் அடித்தள மாவட்ட நிர்வாகிகளிடையே அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மறுபுறம், அதிமுக கொறடா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ராஜினாமா எதிர்ப்பு வழக்கின் நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் அதிருப்தியாளர்கள், விஜயபாஸ்கரின் இந்த ‘சீட் ஆஃபர்’ நகர்வால் தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியையும் முக்கிய நிர்வாகிகளையும் தவெக மொத்தமாக அறுவடை செய்யத் திட்டமிட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இது மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளது.