கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத சூழலில் தான், கோழைகள் ஆபாசத்தையும் அவதூறையும் தங்களின் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் எனக் கூறி, ஆளுங்கட்சியான திமுகவின் சமூக வலைதளப் பிரச்சாரங்களுக்குத் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது.
தமிழக அரசியலில் தவெக மற்றும் திமுக ஆகிய இரு துருவக் கட்சிகளிடையே சமூக வலைதளக் களம் கடும் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக, தவெக தலைவர் மற்றும் தொண்டர்களைக் குறிவைத்துத் திமுக ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து தனிப்பட்ட முறையில் வரம்புகடந்த ஆபாச வசவுகளும், இரட்டை அர்த்தப் பேச்சுகளும் பரப்பப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராகத் தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவினரின் இத்தகைய கீழ்த்தரமான அரசியல் போக்கு மக்கள் மத்தியில் அவர்களையே முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேடைகளில் பேரறிஞர் அண்ணாவின் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ மற்றும் பெண் விடுதலை குறித்து முழங்கும் திமுக தலைவர்கள், நடைமுறையில் தங்களது அடிமட்டத் தொண்டர்களுக்கு அந்த நாகரிகத்தைக் கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டனர் எனத் தவெக சுட்டிக்காட்டியுள்ளது. “ஆபாச நதியையும் வன்ம நதியையும் ஓடவிட்டு கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டு இயங்குவதற்கு எதற்கு அரசியல் கட்சி நடாத்த வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள தவெக, திமுகவின் இந்த அநாகரிகப் பிரச்சாரம் மக்கள் மன்றத்தில் உரிய பதிலைப் பெறும் என்றும் எச்சரித்துள்ளது.
தவெக தொண்டர்களின் அமைதியைக் பலவீனமாகக் கருதி அவதூறுகளை வீசினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ள தவெக ஐடி விங், தங்களின் வழக்கமான பாணியில் “ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப கியூட்டா, ரொம்ப லவ்வபிள்ளா எச்சரிக்கிறோம்” எனக் கூறி தங்களது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் அரசியல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், திமுக – தவெக இடையிலான இந்த நேருக்கு நேர் அறிக்கைப் போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.