மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் மற்றும் சவுதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 107 டாலர்களைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கிலிருந்து மேற்குப் பகுதிக்கு எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய ‘ஈஸ்ட்-வெஸ்ட்’ குழாய்வழிப் பாதை டிரோன் தாக்குதலால் செயலிழந்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதியாகக் குறைந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதத்தை இந்த ஒரு பாதை மட்டுமே பூர்த்தி செய்து வந்த நிலையில், தற்போது அதன் செயல்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent Crude) ரக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 2.8 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 107.50 டாலருக்கு மேல் வர்த்தகமானது. அதேபோல் அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI Crude) எண்ணெய் விலை 102 டாலரை தாண்டியுள்ளது. ஹோமுஸ் மற்றும் பாப் அல்-மந்தேப் ஆகிய சர்வதேச கடல்சார் எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் தொடர்ந்து வரும் தாக்குதல்கள், இந்த விலை ஏற்றத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளன.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு, உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தை மீண்டும் அதிகரிக்கும் என்ற கவலையை தோற்றுவித்துள்ளது. எண்ணெய் விநியோகக் கோளாறுகள் மற்றும் பாதைகளைச் சீரமைக்கும் பணிகள் தாமதமானால், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 119 டாலர் வரை உயரும் அபாயம் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.