Posted in

யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலை வரலாம் – AI வேகம் குறைக்க எலான் மாஸ்க், சாட்ஜிபிடி தலைமை ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி, எதிர்காலத்தில் மனிதகுலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் ஆபத்து இருப்பதாக ‘செயற்கை நுண்ணறிவின் தந்தை’ (Godfather of AI) என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் மற்றும் சர்வதேச உளவுத்துறை தலைவர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். “எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை மனிதர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமா என்பது யாருக்கும் தெரியாது” என்ற கூற்று, உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், AI தொழில்நுட்பங்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

முன்னணி AI நிறுவனமான Anthropic-ன் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடெய் வெளியிட்ட புதிய அறிக்கையில், AI மாடல்கள் மனிதர்களின் உதவியின்றி சுயமாகத் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறனை (Recursive Self-Improvement) எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, இணையப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் எழுவதுடன், அரசியல் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு மட்டங்களில் கட்டுப்படுத்த முடியாத அரசியல் அச்சுறுத்தல்கள் (Political Threat) தோன்றும் என்பதால், AI வளர்ச்சியைச் சற்று நிதானப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் எக்ஸ் (X) தளத்தின் அதிபர் எலான் மாஸ்க் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். AI தொழில்நுட்பத்தை முற்றிலும் நிறுத்துவது நோக்கமல்ல என்றாலும், அதன் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யவும், மூன்ராம் தரப்பு தணிக்கையாளர்கள் மூலம் சோதனைகளை மேற்கொள்ளவும் போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், இந்த வேகம் குறைப்பு அவசியமாகிறது எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில், சீனா போன்ற வல்லரசு நாடுகளின் உளவுத்துறை அமைப்புகளும் AI தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் போலித் தகவல்கள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை குறித்த கவலைகளை வெளியிட்டுள்ளன. சர்வதேச அளவில் முறையான வரம்புகளையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கத் தவறினால், வணிகப் போட்டியின் காரணமாக உருவாக்கப்படும் மிக அதிநவீன AI அமைப்புகள் மனித சமுதாயத்தின் கட்டுப்பாட்டை இழந்து மிகப்பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.