Posted in

240 கி.மீ பயணம் செய்து கொடூரக் கொலை – கடையில் கத்தி வாங்கி மனிதனைச் சாய்த்த வாலிபரின் வெறிச்செயல்!

இங்கிலாந்தின் லீட்ஸ் (Leeds) நகரிலிருந்து லண்டனுக்கு சுமார் 150 மைல்கள் (240 கிலோமீட்டர்) பயணம் செய்து, 26 வயது வாலிபரைத் திட்டமிட்டு ஓட ஓட விரட்டிக் கொடூரமாகக் குத்திக் கொன்ற 18 வயது ஆப்கான் அகதி இளைஞரின் கொடூரச் செயல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கொலையாளி சுலைமான் தாஜாய் (Sulaiman Tajzai), கடந்த மார்ச் 27 அன்று லீட்ஸ் நகரிலுள்ள ஒரு கடையில் கத்தியை வாங்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதன் பின்னர் ரயிலில் லண்டன் நகருக்குச் சென்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வசித்து வந்த ஃபர்மானுல்லா ஷெர்சாத் (Farmanullah Sherzad) என்பவரின் வீட்டின் வெளியே பல மணி நேரம் காத்திருந்துள்ளார். வேலை முடிந்து இரவு 10:15 மணிக்கு வீடு திரும்பிய ஷெர்சாத்தை வழிமறித்து, அவர் தப்பியோட முயன்றபோதும் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பின் தப்பிச் செல்லும்போது செயிண்ட் ஜேம்ஸ் பார்க் அருகே தாஜாய் தவறவிட்ட கையுறைகளில் இருந்த டிஎன்ஏ (DNA) மாதிரிகளை வைத்து லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல் துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், தாஜாயின் உறவினர் மனைவியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பகை மற்றும் தகராறு காரணமாகவே இந்தத் திட்டமிட்ட படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

லண்டன் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தாஜாய் தன் மீதான கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு வழங்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கத்திக் குற்றங்கள் (Knife Crime) மற்றும் குற்றவாளிகள் மிக எளிதாகக் கத்திகளைக் கொள்முதல் செய்யும் போக்கு குறித்த கவலைகள் அந்நாட்டு மக்களிடையே மீண்டும் தீவிரமடைந்துள்ளன.