சென்னை கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராகி தொடர் முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாகக் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சேர்க்கப்பட்ட அவருக்கு, பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் தொடர்ந்து தீவிரச் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி, “கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளும் சுவாச ஆதரவும் (Respiratory Support) தகுந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக (Clinically Stable) உள்ளதுடன், சிகிச்சைகளுக்குச் சிறப்பாகப் பதிலளித்துத் தொடர் முன்னேற்றம் அடைந்து வருகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
75 வயதான மூத்த அரசியல்வாதியான வி.எஸ். பாபு, தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். அவர் விரைவில் பூரண நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனத் தமிழக வெற்றி கழகத் தொண்டர்களும் கொளத்தூர் தொகுதி பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.