Posted in

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பூமிக்கு பாய்ந்தேன் – ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானி பகிர்ந்த பகீர் உண்மைகள்!

ஈரானில் அமெரிக்க F-15E போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், சேதமடைந்த பாராசூட்டுடன் மணிக்கு 100 மைல் (சுமார் 160 கி.மீ) வேகத்தில் விண்ணிலிருந்து பூமிக்குக் விழுந்து, உடைந்த எலும்புகளுடன் ஈரானியப் படைகளிடமிருந்து 50 மணி நேரம் தப்பிய அமெரிக்க விமானி ‘பிராவோ’ (Bravo) தனது திகிலூட்டும் அனுபவங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். ‘CBS 60 Minutes’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈரானிய எல்லைப் பகுதியில் ‘டியூட் 44’ (Dude 44) என்ற எஃப்-15ஈ ரகப் போர் விமானத்தில் ஆயுதக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் (WSO) பணியாற்றிய கர்னல் பிராவோ மற்றும் விமானி ஆல்ஃபா ஆகிய இருவர் பயணித்த விமானம் ஈரானின் தோள்மீது வைத்து இயக்கும் ஏவுகணையால் தாக்குதலுக்கு உள்ளானது. ஏவுகணை தாக்கிய அடுத்த சில நொடிகளில் இருவரும் விமானத்திலிருந்து வெளியேறியபோதிலும் (Eject), தாக்குதலில் பிராவோவின் பாராசூட் சேதமடைந்ததால் அவர் எவ்வித முட்டுக் கட்டையுமின்றி அதிவேகமாகப் பூமிக்கு நோக்கிப் பாய்ந்துள்ளார்.

இந்தக் கொடூரமான வீழ்ச்சியில் அவரது முதுகுத்தண்டு எலும்பு, கை மற்றும் தோள்பட்டை முறிந்ததோடு தலைப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும், “ஈரான் தொலைக்காட்சியில் குற்றவாளியாக நிற்கக் கூடாது” என்ற ஒரே நோக்கத்துடன், உடைந்த எலும்புகளுடனும் கடும் வலியுடனும் ஈரானின் ஜாக்ரோஸ் (Zagros) மலைப்பகுதியில் சுமார் 7,000 அடி உயரமுள்ள சிகரத்தை நோக்கிச் தவழ்ந்து சென்று தப்பியோடி மறைந்து கொண்டார். ஈரான் ராணுவத்தினர் அவரைத் தேடிச் சில நூறு மீட்டர்கள் தொலைவு வரை நெருங்கியபோதும் அவர் பிடிபடவில்லை.

இதற்கிடையே அமெரிக்க உளவுத்துறை (CIA) மற்றும் சிறப்பு மீட்புப் படையினர் (US Special Operators) 90-க்கும் மேற்பட்ட வீரர்களை ஈரானிய எல்லைக்குள் களமிறக்கி, 50 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ஹெலிகாப்டர் மூலம் கர்னல் பிராவோவை பத்திரமாக மீட்டனர். “இறப்பின் விளிம்பிலிருந்து உயிருடன் மீண்டது ஒரு நவீனகால அற்புதம்” எனக் குறிப்பிட்டுள்ள பிராவோ, தனது உயிரைக் காப்பாற்ற ஆபத்தான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்கச் சிறப்புப் படைகளுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.