பால்டிக் கடற்பகுதியில் டென்மார்க் நாட்டின் ஹெலிகாப்டர் மீது ரஷ்யப் போர்க்கப்பல் சுட்டு அச்சுறுத்திய சில மணி நேரங்களிலேயே, நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் லிதுவேனியா நாட்டின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்றை நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் வட ஐரோப்பாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸ் எல்லை வழியாக நள்ளிரவில் லிதுவேனிய வான்வெளிக்குள் ஊடுருவிய இந்த ட்ரோன், நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி மையமான குரூனிஸ் (Kruonis) நீர்மின் நிலையத்திற்கு அருகில் பறந்தபோது, இத்தாலிய விமானப்படைக்குச் சொந்தமான நேட்டோ ரோந்துப் போர் விமானங்கள் அதைத் துல்லியமாக இடைமறித்துச் சுட்டு வீழ்த்தின. இந்த உடனடி நடவடிக்கைக்கு லிதுவேனியா அதிபர் கிட்டானாஸ் நௌசேதா நேட்டோ படைகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, பால்டிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த டென்மார்க் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை நோக்கி ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று ஆபத்தான முறையில் ஒளிரும் தோட்டாக்களைப் (Flares) பாய்ச்சி அச்சுறுத்தியது. இந்தத் தொடர் வான்வெளி மற்றும் கடற்படை அத்துமீறல்கள், ரஷ்யா-உக்ரைன் போரின் அலைகள் நேட்டோ எல்லைகளுக்கும் பரவுவதைக் காட்டுவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து லிதுவேனியா மற்றும் அண்டை பால்டிக் நாடுகளான லாட்வியா, எஸ்டோனியா ஆகிய பகுதிகளில் நேட்டோ அமைப்பு தனது வான் பாதுகாப்புத் தயார்நிலையை ‘ரெட் அலர்ட்’ (Red Alert) அளவிற்கு உயர்த்தி, ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், நேட்டோ வான்வெளியில் நடக்கும் இத்தகைய ஊடுருவல்கள் மேலைநாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல் அபாயத்தை அதிகப்படுத்தியுள்ளன.