Posted in

நியூயார்க்கில் சப்வே ரயில் மோதி இந்திய வம்சாவளி பெண், நண்பர் கொடூர பலி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிப் கொண்டிருந்த இந்திய வம்சாவளிப் பெண் மற்றும் அவரது நண்பர் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூஜெர்சியைச் சேர்ந்த 24 வயதான மலாய்கா சித்ரே (Malaika Chitre) என்ற இந்திய வம்சாவளிப் பெண்ணும், அவரது நீண்டகால நண்பரான நேபாள-அமெரிக்கப் பின்னணி கொண்ட நவம் கவுல் (Navam Kaul, 24) என்பவரும் லோயர் மேன்ஹாட்டனில் உள்ள ஸ்பிரிங் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்தில் அதிகாலை 3:15 மணியளவில் இந்த விபத்தில் சிக்கினர். இருவரில் ஒருவர் முதலில் தண்டவாளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என்றும், அவரைக் காப்பாற்ற மற்றவர் இறங்கிய நிலையில் ரயில் மோதியிருக்கலாம் என்றும் நியூயார்க் காவல்துறையின் (NYPD) முதற்கட்டப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது வேகமாக வந்த எண் 4 சப்வே ரயிலின் ஓட்டுநர் உடனடியாக அவசரக் காலத் தடையை (Emergency Brake) இயக்கியபோதிலும், ரயிலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதால் இருவர் மீதும் ரயில் மோதியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ரயிலின் கீழ் சிக்கியிருந்த இருவரையும் சடலமாகக் கைப்பற்றினர். ரயிலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

கொல்லப்பட்ட மலாய்கா சித்ரே மற்றும் நவம் கவுல் ஆகிய இருவரும் நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் (Rutgers University) ஒன்றாகப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் ஆவர். இந்த விபத்து தொடர்பாகக் சப்வே நிலையக் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், மதுபோதை காரணமாக ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.