Posted in

தாலிபான்களிடம் சிக்கிய தவித்த கேரள வ்லோகர் அருணிமா; நள்ளிரவில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஆப்கானிஸ்தானில் தனியாகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வரும் கேரளாவைச் சேர்ந்த ‘பேக்பேக்கர் அருணிமா’ (Backpacker Arunima) என்ற பிரபல வ்லோகர், அந்நாட்டின் பாமியான் (Bamyan) மாகாணத்தில் தாலிபான் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது அச்சுறுத்தலுக்கு உள்ளான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளைத் தனியாகச் சுற்றி வரும் அருணிமா, சில வாரங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து வழக்கமான பயண வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் பாமியான் நகரை அடைந்த போது, அந்நாட்டு சட்டப்படிப் பெண் ஒருவர் ஆண் துணையின்றி தனியாகப் பயணம் செய்யக் கூடாது என்பதைக் சுட்டிக்காட்டிய தாலிபான் தீவிரவாத அமைப்பினர் (Mujahideen), அவரைத் தடுத்து நிறுத்தி கடவுச்சீட்டு மற்றும் அனுமதிப் பத்திரங்களைக் கேட்டு விசாரணை நடத்தினர்.

ஆண் துணை இல்லாததால் தமக்கு மாகாண அனுமதிச் சீட்டு (Permit) வழங்கப்படவில்லை எனக் கூறிய அருணிமாவை, “சட்டத்தை மீறிவிட்டீர்கள்” எனக் கூறி தாலிபான்கள் கைது செய்ய முயன்றதால் அவர் நிலை குலைந்தார். உடனடியாக இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள உதவி கோரி முகநூல் பக்கத்தில் அவர் அவசரச் செய்தி (SOS) வெளியிட்டார். பின்னர், உள்ளூர் வழிகாட்டி ஒருவரின் தலையீடு மற்றும் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அபராதம் செலுத்தி உஸ்பெகிஸ்தான் எல்லை நோக்கிச் செல்ல அவரை தாலிபான்கள் அனுமதித்தனர்.

“கைது செய்யப்படும் அச்சத்தில் சில மணி நேரம் நரக வேதனையை அனுபவித்தேன்” எனக் கூறிய அருணிமா, சிறையில் அடைக்கப்படாமல் தப்பித்த போதிலும், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளே இந்த நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். கேரள வ்லோகருக்கு ஏற்பட்ட இந்த ஆபத்தான அனுபவம் சர்வதேசப் பயணிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது