Posted in

அலமாரிக்குள் ஒளிந்த குற்றவாளியை சிக்க வைத்த இலவச Wi-Fi!

லண்டனின் வெம்ப்ளி (Wembley) பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜோயல் லூயிஸ் (Joel Louis) என்ற போதைப்பொருள் வியாபாரி, சிறுவர்களைப் பயன்படுத்திப் போதைப்பொருள் கடத்தி வந்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு உள்ளானார். ‘பாபி (Bobby)’ என்ற பெயரில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த இவர், சிறுவர்களிடம் கைபேசிகளைக் கொடுத்து கொகைன் மற்றும் ஹெராயின் போன்ற அபாயகரமான போதைப்பொருள்களை விநியோகம் செய்து வந்ததாகக் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன் இருப்பிடத்தை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகத் தொழில்நுட்ப வழிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தார் லூயிஸ். இணையப் பயன்பாட்டின் போது விபிஎன் (VPN) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது ஐபி (IP) முகவரியை மறைத்து வந்த போதிலும், அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே இருந்த பொது இலவச வை-பை (Public Wi-Fi) நெட்வொர்க்கில் அவருடைய கைபேசி தெரியாமல் தானாகவே இணைக்கப்பட்டது. இந்த சிறிய தொழில்நுட்பத் தவறைக் கண்டறிந்த லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல் துறையினர், சிக்னலை வைத்து அவர் இருக்கும் துல்லியமான இடத்தை அடையாளம் கண்டனர்.

காவல்துறையினர் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, பயந்துபோன ஜோயல் லூயிஸ் வீட்டிலிருந்த ஒரு துணி அலமாரிக்குள் (Wardrobe) சென்று மறைந்துகொண்டார். எனினும், சோதனையில் அலமாரிக்குள் ஒளிந்திருந்த அவரை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர். கைது செய்யப்பட்டபோது “என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்?” என்று அவர் ஆச்சரியத்துடன் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8,800 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருள்கள், ரூ.8,000 ரொக்கம், 6 கைபேசிகள் மற்றும் துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறுவர்களைத் தவறான வழியில் பயன்படுத்தி வன்முறைக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் ஆளாக்கிய குற்றத்திற்காக, லண்டன் ஹேரோ கிரவுன் நீதிமன்றம் (Harrow Crown Court) ஜோயல் லூயிஸுக்கு 12 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மிகக் கவனமாகத் திட்டமிட்டு போதைப்பொருள் கும்பலை நடத்தி வந்த நபர், ஒரே ஒரு வை-பை இணைப்பின் தவறால் அலமாரிக்குள் வைத்துச் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.