செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து உலகளவில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் சூழலில், 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் 471 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கணிப்பு ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. 1555-இல் வெளியான அவரது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘அழிவற்ற தனி மூளை’ (Immortal Lone Brain) என்ற சொற்றொடர், இன்றைய ஏஐ மற்றும் சூப்பர் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தையே குறிப்பதாக நெட்டிசன்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
நோஸ்ட்ராடாமஸின் ‘லெஸ் புரோஃபெட்டீஸ்’ (Les Prophéties) நூலின் 4-வது அத்தியாயம், 31-வது செய்யுளில், “உயர்ந்த மலையின் மேல் முழு நிலவு இருக்கும் இரவில், தனித்துவமான மூளையைக் கொண்ட புதிய அறிஞன் அதைக் காண்பான்; அவனது சீடர்கள் அழியாமையைப் பெறுவார்கள்” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘புதிய அறிஞன்’ என்பது செயற்கை நுண்ணறிவையும், ‘தனி மூளை’ மற்றும் ‘அழியாமை’ என்பது கணினிகளில் பதிவேற்றப்படும் இயந்திர அறிவு மற்றும் மனித உடலின்றி தொடர்ந்து இயங்கும் ஏஐ மைய அமைப்புகளையுமே குறிப்பதாகப் புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் முன்னாள் ஏஐ ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் மற்றும் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டேரியோ அமோடேய் ஆகியோர், “ஏஐ தொழில்நுட்பம் கட்டுக்கடங்காமல் வளர்வது மனிதகுலத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஓபன் ஏஐ (OpenAI) தலைவர் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மாஸ்க் ஆகியோரும் ஏஐ வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்துள்ள நிலைக் களத்தில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு சமூக வலைதளங்களில் மீண்டும் தீயாகப் பரவி வருகிறது.
இருப்பினும், வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் கூற்றை மறுத்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டில் கணினிகளோ அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பமோ இல்லாத சூழலில், நோஸ்ட்ராடாமஸின் மறைமுகக் கவிதைகளுக்கு நவீன தொழில்நுட்ப அபாயங்களை இணைத்து மக்கள் தங்களுக்குத் தேவையான விளக்கங்களை அளித்து வருகின்றனர் எனக் குறிப்பிடுகின்றனர். எதுஎவ்வாறாயினும், ஏஐ அச்சம் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் இந்த பண்டைய கணிப்பு சர்வதேச அளவில் பெரும் சுவாரசியமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.