சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம். வீரமணி உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், ராயப்பேட்டை லாயர்ஸ் காலனியில் உள்ள வீரமணியின் வீட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்த சீனு என்ற சீனிவாசன் என்பவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தற்போது கைது செய்துள்ளது. சிறுமிகள் தொடர்ச்சியாக வீட்டிற்கு அழைத்து வரப்படுவது தெரிந்தும், அதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் உடந்தையாக இருந்த காரணத்திற்காக இரு போக்சோ வழக்குகளின் கீழ் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவலாளி சீனிவாசன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைதானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காவலாளியிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர விசாரணையில், கடந்த காலங்களில் எத்தனை சிறுமிகள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்த பல முக்கியத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவரான பிரகாஷ் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்ட காவலாளி சீனிவாசனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து ஆதாரங்களையும் தொகுத்து விரைவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எஸ்டிஐ தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.