முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மக்கள் அளித்த வாக்கால் அல்லாமல், வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தில்தான் ஆட்சிக்கு வந்துள்ளது என்றும், அவர்களின் அறியாமை நிர்வாகத்திற்குத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாகத் தேடிச் சென்று வாக்களித்த மக்கள், தற்போது தவறான நபர்களைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார். “தவெக அரசுக்கு அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லை. அனுபவமில்லாத அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் எந்தவொரு துறையிலும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தத் தெரியாமல் திணறி வருகின்றனர்; இது மக்கள் ஆட்சியா அல்லது சினிமா ஷூட்டிங்கா என்பதே புரியவில்லை” என அவர் காட்டமாக விமர்சித்தார்.
மேலும், காவிரி நீர் பங்கீடு, மின்வெட்டு பிரச்சனை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்தத் தெரியாமல், தோல்விகளை மறைக்கப் பழியை மற்றவர்கள் மீது தவெக அரசு போட்டு வருகிறது எனத் தினகரன் குற்றம் சாட்டினார். “துக்ளக் பாணி நிர்வாகத்தை நடத்தி வரும் இந்த அரசு, மக்களின் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் இந்த ஆட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு அமமுக முழு ஆதரவு அளித்துத் தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றும் என்றும், தவெகவை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு என்றும் டிடிவி தினகரன் உறுதியளித்தார். தமிழக அரசியல் களம் இடைத்தேர்தல் காய்ச்சலில் சூடபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தவெகவுக்கு எதிராக டிடிவி தினகரன் எடுத்துள்ள இந்த அதிரடித் தாக்குதல் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.