ஈரானின் மஷாத் நகரில் இருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட ‘செபெஹ்ரன் ஏர்லைன்ஸ்’ (Sepehran Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 (Boeing 737) பயணிகள் விமானம், நடுவானில் கடும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் குலுங்கிப் பதற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே அதன் ஒரு டயர் கழன்று தெறித்ததாகவும், அதன் சிதறல்கள் எஞ்சினில் மோதிப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் எஞ்சின் கோளாறு மற்றும் பயங்கர அதிர்வுகள் ஏற்பட்டதால், விமானிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்தை நோக்கித் திருப்பி அவசர அவசரமாகத் தரையிறக்கினர். விமானம் நடுவானில் மிகக் கடுமையாகக் குலுங்கியதால் பயணிகள் அலறியடித்துக் கதறினர். இந்த அதிர்வின் தீவிரத்தால் பயணிகள் அமர்ந்திருந்த கேபின் அறையின் மேல்பகுதி கூரையின் பேனல்கள் உடைந்து பயணிகள் மீது விழுந்ததோடு, கைபேக் வைக்கும் அறைகள் திறந்து பொருள்கள் கீழே சிதறின.
விமானத்தில் ஏற்பட்ட இந்த நடுவானில் பீதி குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் பிரார்த்தனை செய்வதும், கூரை இடிபாடுகள் கீழே விழுந்ததும் அதில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், விமானிகளின் திறமையான செயல்பாடால் விமானம் மஷாத் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரும் கெர்மான்ஷா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (CAO) உத்தரவிட்டுள்ளது. டயர் வெடித்து எஞ்சின் பாதிக்கப்பட்டதா அல்லது வான்வழி அதிர்வுகள் இதற்குக் காரணமா என்பது குறித்து விமானத் துறை வல்லுநர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.