Posted in

ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வேட்டை! உதம்பூரில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் பலி

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் (Udhampur) மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நள்ளிரவில் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் மேலும் சிலர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ராணுவம் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் இணைந்து அப்பகுதியை முழுமையாகச் வளைத்துத் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

உதம்பூர் மாவட்டத்தின் மஜால்டா (Majalta) வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவத்தின் ‘பாரா’ சிறப்புப் படைகள் (Para SF) மற்றும் சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் இணைந்து புதன்கிழமை இரவு அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் உடனடியாக பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த கோரத் துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பலியான பயங்கரவாதிகளிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை அறியச் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மஜால்டா வனப்பகுதி முழுவதும் கூடுதல் ராணுவப் படைகள் விடுக்கப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை வழியே ஊடுருவல் முயற்சிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், ஜம்மு பிராந்தியம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் முற்றிலும் ஒடுக்கப்படும் வரை இந்தத் தேடுதல் வேட்டைத் தொடரும் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.