Posted in

நிலவில் விழுந்த பிரம்மாண்ட விண்கல்; 132 ஆண்டுகளில் இல்லாத அபூர்வப் பள்ளத்தைக் கண்டுபிடித்த நாசா!

நிலவின் மேற்பரப்பில் குறுங்கோள் (Asteroid) அல்லது வால்நட்சத்திரத்தின் (Comet) துண்டு மோதியதால் உருவான பிரம்மாண்டமான புதிய பள்ளம் (Crater) ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) அதன் லூனார் ரீகானைசன்ஸ் ஆர்பிட்டர் (LRO) விண்கலம் மூலம் கண்டுபிடித்துள்ளது.

ரோமின் புகழ்பெற்ற ‘கொலோசியம்’ (Colosseum) விளையாட்டரங்கை விடப் பெரிய அளவிலான இந்த விண்கல் பள்ளம், கடந்த 132 ஆண்டுகளில் சூரிய குடும்பத்தில் பதிவான மிகப்பெரிய அதிநவீனப் பள்ளம் என்று விஞ்ஞானிகள் வியப்புடன் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மே மாதத்திற்குள் 3 முதல் 6 மாடி கட்டடத்தின் அளவிற்கு நிகரான பெரிய விண்கல் நிலவின் மீது மோதியுள்ளது. 222 மீட்டர் (728 அடி) அகலமும், 43 மீட்டர் (141 அடி) ஆழமும் கொண்ட இந்தப் பள்ளத்திற்கு மறைந்த புகழ்பெற்ற நிலவு ஆய்வாளர் தாமஸ் மெக்கெட்சின் நினைவாக ‘மெக்கெட்சின்’ (McGetchin) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மோதலின் போது தூசிகள் மற்றும் பாறைத் துகள்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு அதிவேகமாக தூக்கி எறியப்பட்டு நிலவின் மேற்பரப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

விண்வெளி மற்றும் பூமியிலுள்ள அதிநவீன தொலைநோக்கிகளின் கண்ணில் கூடச் சிக்காமல் நடைபெற்ற இந்த மோதலை, நாசாவின் எல்.ஆர்.ஓ விண்கலம் எடுத்த புகைப்படங்களை விரிவாக ஆய்வு செய்த போதே அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். நிலவில் வளிமண்டலம் இல்லாததால் விண்கற்கள் எரியாமல் நேரடியாக வந்து மோதி இத்தகைய ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய மோதல்கள் நிலவின் மேற்பரப்பு மண்ணை அடிக்கடி மாற்றி அமைப்பதால், அபோலோ விண்வெளி வீரர்கள் நிலவில் பதித்து வந்த காலடித் தடங்கள் கூடக் குறிப்பிட்ட காலத்திற்குள் முற்றிலும் மறைந்துவிடும் என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

நிலவில் மனிதர்களை மீண்டும் அனுப்பி தங்கும் தளங்களை அமைக்கும் ‘ஆர்டெமிஸ்’ (Artemis) திட்டத்தில் நாசா தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், இந்த புதிய பள்ளத்தின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் கட்டப்படும் விண்வெளி வீராங்கனைகளுக்கான குடியிருப்புகளை இத்தகைய விண்கல் தாக்குதல்கள் மற்றும் அதிவேகப் பாறைத் துகள்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான உத்திகளை உருவாக்க இந்த ஆய்வுப் தரவுகள் பெரிதும் உதவும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.