Posted in

NATO அமைப்பின் ‘பலவீனமான புள்ளியை’ இலக்கு வைக்கிறதா பெலாரஸ்? போலந்து எல்லை அருகே திடீர் டாங்கிகள் மற்றும் ட்ரோன் குவிப்பு!

நேட்டோ (NATO) ராணுவக் கூட்டமைப்பின் மிகவும் பலவீனமான மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ‘சுவால்கி காரிடார்’ (Suwalki Gap) எல்லைப் பகுதியை ஒட்டி, பெலாரஸ் நாடு தனது ராணுவ டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நவீன ட்ரோன் படைகளைக் குவித்து 4 நாள் பிரம்மாண்டமான போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. போலந்து மற்றும் லிதுவேனியா எல்லைகளுக்கு மிக அருகில் நடைபெறும் இந்த ராணுவ நடவடிக்கை, கிழக்கு ஐரோப்பாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலந்தையும் லிதுவேனியாவையும் இணைக்கும் சுமார் 104 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ‘சுவால்கி காரிடார்’, பால்டிக் நாடுகளை எஞ்சிய நேட்டோ நாடுகளுடன் இணைக்கும் ஒரே நிலப்பரப்பு பாதையாகும். ரஷ்யாவின் காலினின்கிராட் (Kaliningrad) பிராந்தியத்திற்கும் பெலாரஸிற்கும் இடையே அமைந்துள்ள இந்தச் குறுகிய வழித்தடத்தைக் கைப்பற்றினால், நேட்டோ படைகளின் தொடர்பைத் துண்டிக்க முடியும் என்பதால், இங்குப் பெலாரஸ் தனது படைகளைக் குவித்திருப்பது நேட்டோ நாடுகளை பலத்த எச்சரிக்கை நிலையில் இருக்க வைத்துள்ளன.

பெலாரஸ் ராணுவ தலைமை தளபதி பாவெல் முரவேகோ தலைமையின் கீழ் நடைபெறும் இந்தப் போர்ப் பயிற்சியில், எல்லை பாதுகாப்பு, எதிரிநாட்டு உளவுப் படைகளை எதிர்கொள்ளுதல் மற்றும் FPV ட்ரோன் தாக்குதல்களை முறியடித்தல் போன்ற பயிற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், “நாங்கள் எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் தாக்குதல் நடத்தத் திட்டமிடவில்லை; இது முற்றிலும் தற்காப்பு சார்ந்த ராணுவப் பயிற்சியே” என்று பெலாரஸ் ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ரஷ்யாவின் நெருங்கிய தோழமை நாடான பெலாரஸ் எல்லையில் ராணுவ வலிமையைக் காட்டுவது தற்செயலானது அல்ல என மேலைநாடுகள் கருதுகின்றன. இதன் காரணமாக, போலந்து மற்றும் லிதுவேனியா எல்லைப் பகுதிகளில் தற்காப்புப் படைகள் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.