Posted in

மனித குலத்திற்கு பேராபத்தா ஏஐ தொழில்நுட்பம்? லண்டன் மன்னர் சார்லஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை என்ன?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தவறான நபர்களின் கரங்களில் கிடைத்தால் அது மனிதகுலத்தின் இருப்பிற்கே ஆபத்தாக (Existential Threat) முடியும் என பிரிட்டன் மன்னர் 3-ஆம் சார்லஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள டம்ப்ரீஸ் ஹவுஸில் (Dumfries House) உலகளாவிய முன்னணி ஏஐ நிறுவனங்களின் தலைவர்களை நேரில் அழைத்து நடத்திய உயர்நிலைக் கூட்டத்தில் மன்னர் சார்லஸ் இந்த அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் ஓபன்ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind), என்விடியா (Nvidia) மற்றும் அன்த்ரோபிக் (Anthropic) போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரிட்டன் AI துறை அமைச்சர் கனிஷ்கா நாராயண் ஆகியோர் பங்கேற்றனர். மருத்துவ அறிவியல் துறைகளில் AI மகத்தான நன்மைகளைச் செய்தாலும், கட்டுப்பாடற்ற அதன் வளர்ச்சி பேரழிவை ஏற்படுத்தும் இருண்ட பக்கங்களையும் கொண்டுள்ளது என்ற கவலையை சர்வதேச சமூகமும் நிபுணர்களும் எழுப்பி வரும் சூழலில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

மாநாட்டில் பேசிய மன்னர் சார்லஸ், “ஏஐ தொழில்நுட்பம் தவறான கைகளுக்குச் சென்று பேரழிவை ஏற்படுத்தும் பேராபத்து குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிலைமை கைமீறிப்போகும் முன், இதைக் கட்டுப்படுத்த போதுமான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார். மேலும், ஏஐ அமைப்புகள் மனித கட்டுப்பாடு மற்றும் தார்மீக விழுமியங்களுக்கு உட்பட்டே செயல்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவின் நன்மைகளைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவும், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய கட்டுப்பாட்டு விவாதங்களை உருவாக்கவும் இக்கூட்டத்தில் முக்கிய யோசனைகள் முன்வைக்கப்பட்டன. உலகளவில் ஏஐ அமைப்புகள் தானாகச் செயல்பட்டு மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக எச்சரிக்கைகள் வெளியாகி வரும் நிலையில், லண்டன் மன்னர் சார்லஸின் இந்தத் தலையீடு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.