Posted in

முடியாது என்றால் அறிவித்து விடுங்கள் விஜய் – மாணவர் பாரதிதாசனுக்கு நிதியளிக்கத் தயாரா என மு.க.ஸ்டாலின் அதிரடி கேள்வி!

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின்’ கீழ் பி.எச்.டி (Ph.D) ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். தமிழக அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதோடு, மனரீதியாக நெருக்கடி தருவதாக மாணவர் பாரதிதாசன் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அரசு வழங்க வேண்டிய இரண்டாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை நிலுவையில் உள்ளதால், தனது ஆராய்ச்சிப் படிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாததால் பல்கலைக்கழகத்தில் இருந்தே நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பாரதிதாசன் வேதனை தெரிவித்துள்ளார். “ரோஹித் வெமுலாவிற்கு நடந்தது போலத்தான் எனக்கும் இந்த அரசு மூலம் நடக்கிறது” என்றும், தான் வாங்கிய பொருட்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி கேட்டு அதிகாரிகள் தன்னைச் சித்ரவதை செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் காரசாரமாகப் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரே காரணத்திற்காக ஒரு மாணவரின் உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “எதிர்க்கட்சியாக இருந்தாலும் த.வெ.க. அரசுக்கு இப்படி ஒரு அவப்பெயர் வரக்கூடாது என்பதே என் விருப்பம். மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால் அதனை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாக அறிவித்துவிடட்டும்; திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் இச்சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவிட்டிருந்தார். உதவித்தொகை கோரிய மாணவரை நோக்கி கேள்விகளை எழுப்பி நெருக்கடி தருவது சமூக அநீதியின் உச்சம் எனக் குறிப்பிட்ட அவர், மாணவரின் படிப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். த.வெ.க ஆட்சியின் கீழ் கல்வி உதவித்தொகை மறுக்கப்படுவதாக எழுந்த இந்த புகார், அரசிற்கு எதிராகப் பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.