“என்னால் தனியாகக் கட்சி நடத்த முடியாது; எங்க அப்பா கொஞ்சம் கோபக்காரர், அதனால் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள், நான் திமுகவிலேயே வந்து இணைந்து விடுகிறேன்” என்று மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ தன்னிடம் கூறியிருந்தார் என திமுகவின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு அதிரடியாகப் போட்டுடைத்துள்ளார். கூட்டணிக்குள் மிசா மற்றும் எம்பி பதவி தொடர்பாக எழுந்த கருத்து மோதல்களுக்கு மத்தியில் நேருவின் இந்த வெளிப்படையான பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக எம்பி துரை வைகோ, “எனது எம்பி பதவி திமுக போட்ட பிச்சை அல்ல; மக்கள் வாக்களித்ததால் மட்டுமே நான் வெற்றி பெற்றேன். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி எளிய தோழமைக் கட்சிகளை பண்ணையார் மனோபாவத்துடன் நடத்தக் கூடாது” என்று காட்டமாக விமர்சித்திருந்தார். மேலும், மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காக அல்ல என்றும் துரை வைகோ பேசியது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேருவிடம் துரை வைகோவின் விமர்சனங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த நேரு, “துரை வைகோ மிகவும் சின்னப் பிள்ளை; அவர் எப்போது என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. ‘எங்கள் அப்பாவால் கோபம் வரும், கொஞ்ச நாள் கழித்து நான் உங்களோடேயே வந்துவிடுகிறேன்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கூறியவர்தான் இந்த துரை வைகோ. அவர் எங்களைப் பற்றியும் தலைவர் ஸ்டாலினைப் பற்றியும் கடுமையாகப் பேசுவது எந்த விதத்திலும் நியாயமில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
மிசா காலம் குறித்தும் திமுகவின் தியாகங்கள் குறித்தும் பேசும் துரை வைகோ, அந்த காலகட்டத்தில் பிறந்திருக்கக்கூட மாட்டார் என்று சாடிய கே.என்.நேரு, நாங்களும் திருப்பிப் பேசத் தொடங்கினால் நிலைமை மாறிவிடும் என்றும் எச்சரித்தார். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மதிமுக – திமுக இடையே சுமூகமான உறவு நிலவி வந்த சூழலில், இரு கட்சித் தலைவர்களுக்கிடையே வெடித்துள்ள இந்த பகிரங்க வார்த்தைப் போர் தமிழகக் கூட்டணி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.