தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு அமைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய மசோதாக்களுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விரைந்து ஒப்புதல் அளித்துள்ளார். பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த வெறும் 5 நாட்களுக்குள்ளாகவே அனைத்துக் கோப்புகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பது, தமிழக நிர்வாக வட்டாரங்களிலும் அரசியல் களத்திலும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகச் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதைப் பரிசீலித்த ஆளுநர் அர்லேகர், 6 மசோதாக்களுக்கு 4 நாட்களிலும், மேலும் 5 மசோதாக்களுக்கு 5 நாட்களிலும் என மொத்தம் 12 மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
அதேவேளையில், தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான ஒரு மசோதா மட்டும் விரிவான பரிசீலனைக்காகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் நீண்ட தாமதம் ஏற்படும் சூழலில், தவெக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் இவ்வளவு விரைவாக ஒப்புதல் அளித்துள்ளது சட்டப் பணிகளை வேகப்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த விரைவான முடிவால், தவெக அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் புதிய சட்டத் திருத்தங்கள் எவ்வித நிர்வாகத் தடங்கலுமின்றி உடனடியாகச் சட்ட வடிவம் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த சீர்திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என அரசுத் துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.