Posted in

பயங்கரவாதி பின் லேடனைப் புகழ்ந்தவருக்குப் மதநல்லிணக்க விருதா? செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தில் லண்டனில் வெடித்த புதிய சர்ச்சை!

பயங்கரவாதி ஒசாமா பின் லேடனைப் புகழ்ந்து பேசி கௌரவித்த பாகிஸ்தான் மதப் போதகருக்கு, செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலின் நினைவு நாளில் இங்கிலாந்து சர்ச்சின் பேராயர் ‘மதநல்லிணக்க விருது’ வழங்கிய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பலத்த எதிர்ப்பையும் கண்டனங்களையும் தொடர்ந்து, வழங்கப்பட்ட அந்தப் புகழ்பெற்ற விருது உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாகப் பேராயர் அலுவலகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லம்பேத் அரண்மனையில் (Lambeth Palace) நடைபெற்ற விழாவில், பாகிஸ்தான் உலேமா கவுன்சிலின் தலைவரான ஹஃபிஸ் முகமது தாஹிர் மஹ்மூத் அஷ்ரஃபி என்பவருக்கு மதநல்லிணக்கத்திற்கான ‘ஹூபர்ட் வால்டர்’ விருது வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2007-ஆம் ஆண்டு பயங்கரவாதி ஒசாமா பின் லேடனுக்கு ‘இஸ்லாத்தின் வாள்’ (Saifullah) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தவர்தான் இந்த அஷ்ரஃபி என்பது தெரியவந்ததும், செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நாளில் அவருக்கு விருது வழங்கியதற்கு பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சர்வதேச சமூகமும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 2,977 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அத்தாக்குதலின் நினைவு நாளில், பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசிய ஒருவருக்கு விருது வழங்கியது ‘வரலாற்றுப் பிழை’ என்றும், ‘அதிர்ச்சியளிக்கும் அறியாமை’ என்றும் அரசியல் தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் சாடினர். இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்து பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து விளக்கமளித்துள்ள பேராயர் அலுவலகம், “அஷ்ரஃபி முன்னதாகத் தெரிவித்த தீவிரவாத ஆதரவுக் கருத்துகள் தற்போதுதான் எங்களது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன; எனவே அவருக்கு வழங்கப்பட்ட விருது உடனடியாகத் திரும்பப் பெறப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது. மத நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காகக் கொடுக்கப்படும் சர்வதேச விருது, போதிய பின்னணி சோதனைகளின்றி பயங்கரவாத ஆதரவாளருக்கு வழங்கப்பட்ட இந்தச் சம்பவம் இங்கிலாந்து மதப் பிரமுகர்களின் நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.