தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி மற்றும் நிரந்தர அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்க தொடர்பாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் 4 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரான அவரிடம், வழக்கின் முதன்மை ஆவணங்களை முன்வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி திருச்சி மற்றும் சென்னையில் உள்ள அன்பில் மகேஷின் இல்லங்கள் உட்பட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள் மற்றும் பென்டிரைவ்கள் உள்ளிட்ட மின்னணு சான்றுகளின் அடிப்படையில் அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தின் 5-வது மாடிக்குச் சென்று அன்பில் மகேஸ் ஆஜரானார்.
இந்த வழக்கின் பின்னணியில், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டு, அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 177-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலித்த புகாரில் திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் தொடர்ச்சியாகவே, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை வளையம் தீவிரமடைந்துள்ளது.
விசாரணைக்குச் செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், “மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை; சட்டரீதியான அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கமளிக்கத் தயார்” எனக் கூறினார். எனினும், கடந்த சில நாட்களுக்கு முன் அவருடைய அலுவலகம் மற்றும் இல்லங்களில் கைப்பற்றப்பட்ட நிதிப் பரிவர்த்தனை ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதால், சென்னை காவல் ஆணையர் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.