Posted in

பழைய கதை பேசாதீங்க, வருங்காலத்தை பேசுங்க – முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் கொடுத்த அட்வைஸ்!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உட்பட ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்து கடந்த கால ஆட்சிகளைப் பற்றி மட்டுமே பேசாமல், மாநிலத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் என்ன என்பது குறித்துப் பேச வேண்டும்” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விக்கிரவாண்டியில் பாமக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இந்த முக்கிய ஆலோசனையை வழங்கினார்.

கடந்த கால அரசாங்கத்தின் குறைகள் மற்றும் கமிஷன் விவகாரங்கள் போன்ற பழைய விஷயங்களைத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்து முதலமைச்சராக்கியுள்ளதால், தமிழகத்தின் எதிர்காலத்திற்காக அரசு என்ன செய்யப்போகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். மாநிலத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தால் போதைப்பொருள் பாதைக்கு இளைஞர்கள் தள்ளப்படுவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வெறுமனே ‘சிங்கப்பெண்ணே’ என்று முழக்கமிடுவதோடு நின்றுவிடாமல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதற்கான திட்டங்களை தவெக அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார். இருப்பினும், தவெக அரசு மீது பல்வேறு நிர்வாகச் சர்ச்சைகள் எழுந்தபோதிலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் சட்டப்பேரவையிலும் வெளியிலும் தொடர்ந்து தவெக அரசின் சில முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பாமகவின் 46 காலக் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை ‘சமூக நீதிச் சர்வே’ என்ற பெயரில் நடத்த தவெக அரசு முன்வந்ததற்குப் பாமக பகிரங்க வரவேற்பு அளித்திருந்தது. இதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் பாமகவின் ஆதரவைப் பெறப் பல்வேறு தரப்பும் முயன்று வரும் வேளையில், தவெக அரசுடன் பாமக காட்டி வரும் இந்த மென்மையான அணுகுமுறை மற்றும் இணக்கமான அரசியல் நகர்வுகள், வரவிருக்கும் தேர்தல்களில் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கத்திற்கான அறிகுறியா என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.