Posted in

வருமான வரி வழக்கு: எஸ்.ஜே.சூர்யா மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, 2002-03 முதல் 2009-10 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளில் உரிய காலத்தில் வருமான வரித் தாக்கலைச் செய்யவில்லை என்றும், வரியை எய்க்க முயன்றார் என்றும் கூறி வருமான வரித் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே 2022-ஆம் ஆண்டிலேயே இதே காரணங்களைக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும், அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால், தற்போதைய சீராய்வு மனுக்களை விசாரிக்க நீதிமன்றம் விருப்பம் தெரிவிக்காததைத் தொடர்ந்து, மனுக்களைத் திரும்பப் பெற எஸ்.ஜே.சூர்யா தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரினார்.

வருமான வரித் தீர்ப்பாயம் தனது மதிப்பீட்டு உத்தரவுகளைத் தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்துள்ளதால், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது எஸ்.ஜே.சூர்யாவின் பிரதான வாதமாக இருந்தது. ஆனால், வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டது குற்றவியல் நடவடிக்கைகளுக்குத் தடையல்ல என்றும், சோதனைக்குப் பிறகே இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, மனுக்களைத் திரும்பப் பெற அனுமதித்து, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருமான வரித்துறைத் தொடர்ந்த குற்றவியல் வழக்கினை எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்து சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.