Posted in

AI படங்கள் மூலம் போலிப் புகார்: பா.ஜ.க பதவி நீக்கத்திற்குப் பின் கருப்பு முருகானந்தம் அதிரடி விளக்கம்!

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு எம். முருகானந்தம் உடனடியாக விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநிலச் செயலாளர் திவ்யா சேஷாத்ரி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் நீக்கத்தைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள கருப்பு முருகானந்தம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொடங்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றி பா.ஜ.க-வில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்றும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் எந்தவித முறையான விசாரணையும் நடத்தப்படாமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண் நிர்வாகி அளித்த புகாரில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி ஆவணங்களாகச் சித்தரிக்கப்பட்டவை என்று கருப்பு முருகானந்தம் சாடியுள்ளார். தேசிய அளவில் கட்சி மேலிடத்திடம் பேசியபோது உரிய விசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், முறையான ஆய்வின்றி இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தம் மீதான இந்த அவதூறுப் பிரச்சாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ள அவர், உண்மைக்குப் புறம்பான போலி ஆதாரங்களையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்திலும், பா.ஜ.க உட்கட்சி வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.