Posted in

ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் திமுக அலுவலகம்? Document-ஐ கையில் எடுத்த அமைச்சர் ரமேஷ்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் நடத்தி வருவதாக எழுந்த புகாரின் பேரில், திமுக ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் உட்பட 6 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு (FIR) செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பொதுப்பணிக்காக எழுதி வைக்கப்பட்ட 7,515 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை, கடந்த 2022-ஆம் ஆண்டு போலி ஆவணங்களை உருவாக்கிச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூலப்பத்திரங்கள் ஏதுமின்றி காவல்நிலையச் சான்றிதழ்களை வைத்து வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத் துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் உதவியோடு இந்த நிலப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் திமுக அலுவலகம் செயல்பட்டு வருவதோடு, தேர்தல் பணிகளும் அங்கு நடைபெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகள், “கோயில் நிலங்களை மீட்டதாகக் கூறும் அரசு, தங்கள் சொந்தக் கட்சி நிர்வாகி கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அலுவலகம் நடத்தியதை இத்தனை ஆண்டுகளாகக் கண்டுபிடிக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு சாதாரண பகுதிச் செயலாளர் மட்டும் தனித்து இவ்வளவு பெரிய மோசடியைச் செய்ய முடியாது என்றும், இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீடு இருக்கக்கூடும் என்றும் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.

அதேவேளையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திமுக நிர்வாகி ராம்குமார், “குறிப்பிட்ட நிலம் தனிநபர்களுக்குச் சொந்தமானது என்றும், முறையான ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்தார்” என்றும் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேவையின்றி அரசியல் உள்நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தை மீண்டும் கைமாற்றுவதைத் தடுக்கப் பத்திரப்பதிவுத் துறைக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டு, சொத்து பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன.