மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள 40 பேர்கொண்ட ‘நட்சத்திர பிரச்சாரகர்கள்’ (Star Campaigners) பட்டியலில் பெரும் சட்டச் சிக்கல் நிலவுவதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஐ.எஸ். இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். தவெக வெளியிட்டுள்ள பட்டியலில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளுக்கு எதிராகப் பல விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.
இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951) பிரிவு 77-ன் படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக’ (Recognised Political Party) இருந்தால் மட்டுமே 40 நட்சத்திர பிரச்சாரகர்களை நியமிக்க முடியும். ஆனால், தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத அல்லது புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அதிகபட்சமாக 20 நட்சத்திர பிரச்சாரகர்களை மட்டுமே பட்டியலிட சட்டத்தில் இடமுண்டு என இன்பதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.
தவெக இன்னும் தேர்தல் ஆணையத்தின் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறாத நிலையில், 40 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விதிகளை மீறியுள்ளதாக அதிமுக தரப்பு சாடியுள்ளது. நட்சத்திர பிரச்சாரகர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் கணக்கில் சேராது என்ற சலுகையைப் பெறவே தவெக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே விதிகளுக்குப் புறம்பாகப் பட்டியலிடப்பட்ட கூடுதல் நபர்களின் பிரச்சாரச் செலவுகளைத் தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் களத்தில் புதிதாகக் களம் கண்டுள்ள தவெகவின் நட்சத்திர பிரச்சாரகர்கள் செலவுக் கணக்கில் அதிமுக எழுப்பியுள்ள இந்தச் சட்டக் கேள்வி, இடைத்தேர்தல் பிரசாரக் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் இப்புகார் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை அணுகவும் அதிமுக வழக்கறிஞர் அணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.