பிரிட்டன் மக்கள் கோடைகாலம் மற்றும் விடுமுறையைக் கழிக்க அதிகளவில் குவியும் ஸ்பெயின் நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலங்களை பயங்கர புயல், கனமழை மற்றும் கடல் பகுதியில் தோன்றிய அபாயகரமான கடற்சூறாவளிகள் (Waterspouts / Water Tornadoes) சூறையாடி வருகின்றன. ஸ்பெயினின் கேடலோனியா, வாலேன்சியா, பாலீரிக் தீவுகள் மற்றும் அலிகாண்டே உள்ளிட்ட பிரபல கடலோரப் பகுதிகளில் மேகவெடிப்பு போன்ற கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகள் அனைத்தும் நதிகளாக மாறின.
கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய தரைக்கடல் பகுதியில், கார்மேகங்களில் இருந்து கடலை நோக்கி சுழன்று இறங்கிய பிரம்மாண்ட கடற்சூறாவளிகள் உருவானது அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. மணிக்கு 250 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் திறன் கொண்ட இந்தச் நீர்ச் சூறாவளிகளுடன் சேர்ந்து, ஒரே மணி நேரத்தில் பல அங்குல மழை கொட்டித் தீர்த்ததால் வீதிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் பல சொகுசு கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு, ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகச் சம்பவமும் அரங்கேறியுள்ளது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
நிலைமை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, ஸ்பெயின் தேசிய வானிலை ஆய்வு மையம் (AEMET) சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Alert) விடுத்துள்ளது. அவசியமின்றி விடுதிகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஆபத்துள்ள தாழ்வான பகுதிகளைத் தவிர்க்குமாறும் பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்நாட்டு மக்களுக்கும் அவசர எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.