தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் ரசிகர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள சூழலில், அஜித் ரசிகர்கள் தனியாக இயக்கம் மற்றும் அரசியல் கட்சி அமைத்திருப்பது தமிழக அரசியல் களத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ‘தமிழக மக்கள் கழகம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதாக நிர்வாகிகள் அறிவித்தனர். இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கட்சியின் கொடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேல்பகுதியில் மஞ்சள் நிறமும், கீழ்ப்பகுதியில் சிவப்பு நிறமும் கொண்ட இந்தக் கொடியின் நடுவே, கைகளில் நட்சத்திரங்களை ஏந்தியவாறு இரு கரங்கள் இணைந்திருப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டு, “அரசியல் ஆசை எனக்கு இல்லை; ரசிகர்கள் தங்களது குடும்பத்தைக் கவனிக்க வேண்டும்” என்று தெளிவாக அறிவித்திருந்தார். இருப்பினும், அவரது கொள்கைகள் மற்றும் நற்பணிகளை முன்வைத்து, சமூக நலத் தொண்டுகளில் ஈடுபட்டு வந்த ரசிகர்கள் தற்போது அமைப்பாகத் திரண்டு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தக் கட்சி அறிவிப்புக்கும் நடிகர் அஜித் குமாருக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது ரசிகர்களின் தனிப்பட்ட அரசியல் விருப்பம் என்றும் அமைப்பின் நிர்வாகிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். விஜய், அண்ணாமலை எனத் தமிழக அரசியலில் புதிய இயக்கங்கள் களம் கண்டு வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் தொடங்கியுள்ள ‘தமிழக மக்கள் கழகம்’ எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.